மிச்சமிருக்கும் மதுவை ருசி பார்க்கும் குரங்குகள்
சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் பாட்டில்களில் மிச்சமிருக்கும் மதுவை குரங்குகள் ருசிக்கின்றன. இது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வால்பாறை
சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் பாட்டில்களில் மிச்சமிருக்கும் மதுவை குரங்குகள் ருசிக்கின்றன. இது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சுற்றுலா தலம்
கோவை மாவட்டம் வால்பாறையானது, மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்குள்ள பசுமையான தேயிைல தோட்டங்கள், நிரம்பி வழியும் நீர்நிலைகளை காண தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதை தடுக்க ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் தடை செய்யப்பட்ட அந்த பொருட்களை சுற்றுலா பயணிகள் மறைத்து வைத்து கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர்.
வாகனங்களில் அடிபட்டு...
இதற்கிடையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையோர வனப்பகுதியில் குரங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. அவை மலைப்பாதையில் ஆங்காங்கே சுற்றித்திரிவதை காண முடிகிறது. இவ்வாறு உலா வரும் குரங்குகள், சுற்றுலா பயணிகள் வீசியெறிந்து செல்லும் உணவு பொருட்களை தின்று வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்களையும் சேர்த்து தின்பதால், உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கும் மேலாக, சில சுற்றுலா பயணிகள் மதுவை குடித்துவிட்டு காலி பாட்டில்களை வீசி செல்கின்றனர். அவற்றை எடுக்கும் குரங்குகள், அதிலுள்ள மீதமான மதுவை ருசிக்கின்றன. இதனால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் மது போதையில் மலைப்பாதைக்கு நடுவே செல்வதால், வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கண்காணிப்பை மீறி கொண்டு வருகின்றனர். அவர்கள் வனப்பகுதியிலும், சாலையோரங்களிலும் மீதமானவற்றை வீசி செல்கின்றனர். அவற்றை தின்னும் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டியது அனைவரது பொறுப்பு. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் கொண்டு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும். சோதனையில் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.