தூத்துக்குடி மாவட்டத்தில் பொய்த்து வரும் பருவமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்து வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்து வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
குறைவு
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை தூத்துக்குடி மாவட்டத்தை ஏமாற்றி வருகிறது. மாவட்டத்தில் வழக்கத்தை விட குறைவான அளவே மழை பெய்து உள்ளது. கடந்த 01.10.22 முதல் நேற்று வரை சராசரியாக 433.8 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் இதுவரை 299.5 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்து உள்ளது. 31 சதவீதம் மழை குறைவாக கிடைத்து உள்ளது. இதனால் விவசாயிகள் ஒருவித கலக்கத்துடனேயே பயிர் சாகுபடியை தொடங்கி இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமும் சாரல் மழையுடன் வலுவிழந்து சென்று விட்டது. அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட 1.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து உள்ளது.
சாரல் மழை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. அதே போன்று நேற்று காலையிலும் ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. அதன்பிறகு வெயில் அடித்தது. மாலையில் லேசான மேகமூட்டமாக காணப்பட்டது. நேற்று பெய்த மழையால் தூத்துக்குடி மாநகர பகுதியில் ஆங்காங்கே ரோடுகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனை மாநகராட்சி அலுவலர்கள் டேங்கர் லாரிகள் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தினர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை தூத்துக்குடி 9.1, ஸ்ரீவைகுண்டம் 9, திருச்செந்தூர் 37, காயல்பட்டினம் 4, குலசேகரன்பட்டினம் 8, சாத்தான்குளம் 5.6, கோவில்பட்டி 7, கழுகுமலை 13, கயத்தார் 9, எட்டயபுரம் 2.2, விளாத்திகுளம் 2, சூரங்குடி 4, ஓட்டப்பிடாரம் 4, கீழஅரசடி 1 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.