மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

மார்கழி மாத பிறப்பையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதம் பிறப்பு

ஆன்மிக மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் தினமும் பக்தர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். குறிப்பாக அதிகாலையில் பெண்கள் வீடுகளின் முன்பு வண்ண, வண்ண கோலமிட்டும், விளக்கேற்றியும், அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று, விளக்கேற்றியும் வழிபடுவார்கள். மேலும் குழந்தைகள் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பக்தி பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்று, வருவது வழக்கம்.

நேற்று மார்கழி மாதம் பிறப்பையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டின் போது கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உபகார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேகம்

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற குமாரசாமிப்பேட்டை சிவ சுப்ரமணிய சாமி கோவிலில் நேற்று அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமி, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள், பால், சந்தனம் மற்றும் பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் உபகார பூஜைகளும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மகாலிங்கேஸ்வரர் வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் ஓம் சக்தி மாரியம்மன் கோவில் மற்றும் வேல்முருகன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மல்லிகார்ஜூன சாமி கோவில்

கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனுறை மல்லிகார்ஜூன சாமி கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவில், அபய ஆஞ்சநேய சாமி கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல் காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பாப்பாரப்பட்டி புதிய மற்றும் பழைய சிவசுப்பிரமணிய சாமி கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story