தாளவாடி பகுதியில் பல மாதங்களாக அட்டகாசம்: கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது
தாளவாடி பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி தொடர்ந்து பல மாதங்களாக அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் மலைவாழ் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தாளவாடி:
தாளவாடி பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி தொடர்ந்து பல மாதங்களாக அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் மலைவாழ் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
10 வனச்சரகங்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், டி.என்.பாளையம் உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி மற்றும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது.
கூண்டு வைப்பு
குறிப்பாக தொட்டகாஜனூர், சூசைபுரம், ஓசூர் பகுதியில் கடந்த 8 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட நாய்களை சிறுத்தை அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து வந்தது. எனவே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓசூர் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 2 கூண்டுகள் வைத்தனர். மேலும் அந்த கூண்டில் ஆட்டையும் கட்டி வைத்தனர்.
கூண்டில் சிக்கியது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூண்டில் வைத்திருந்த ஆட்டை தின்பதற்காக சிறுத்தை வந்து உள்ளது. அப்போது அந்த கூண்டில் சிறுத்தை வசமாக சிக்கி கொண்டது.
இதுபற்றி அறிந்ததும் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர்.
நல்ல நிலையில்...
இதுகுறித்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா கூறுகையில், 'கூண்டில் சிக்கியது 4 வயதுடைய ஆண் சிறுத்தை ஆகும். பிடிபட்ட சிறுத்தையானது தெங்குமரஹடா மங்கலப்பட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்படும்,' என தெரிவித்தார். மேலும் கூண்டில் சிக்கிய சிறுத்தை நல்ல நிலையில் உள்ளதாக கால்நடை டாக்டர் சதாசிவம் தெரிவித்தார்.
கடந்த 8 மாதங்களாக தாளவாடி பகுதியில் கால்நடைகளை அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை நிம்மதி அடைய செய்து உள்ளது.