மூலச்சிகுளம் தூர்வாரும் பணி
மூலச்சிகுளம் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூலச்சி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் கலெக்டர் மற்றும் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகியோரிடம் மூலச்சி கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சில தன்னார்வ அமைப்புகளால் தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இப்பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கூடத்தில் உள்ள கழிப்பறை, கிணறு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், செயற் பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர் மகேஸ்வரன், அம்பை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரகுமார், பொன்லட்சுமி, சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார், மூலச்சி கிராம பஞ்சாயத்து தலைவர் சமுத்திரகனி மற்றும் விவசாய சங்கத்தினர் உடன் இருந்தனர்.
சிவந்திபுரம் ஊராட்சியில் உதவி கலெக்டர் ரிஷப் ஆய்வு செய்தார். ஆதி திராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிவந்திபுரம் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் தார்சாலை அமைத்தல், குடிநீர் தொட்டிகள், தெருவிளக்குகள், மயான வசதி ஆகிய பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வில் சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் வக்கீல் ஜெகன், அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜம், ஒன்றிய பொறியாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உதயகுமார், ஊராட்சி செயலாளர் வேலு, சுகாதார மேஸ்திரி பெல்பின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.