தோட்டத்தில் கடமான்கள் புகுந்து அட்டகாசம்
களக்காடு அருகே தோட்டத்தில் கடமான்கள் புகுந்து வெண்டைக்காய், தக்காளி பயிர்களை சேதப்படுத்தின.
களக்காடு:
களக்காடு அருகே தோட்டத்தில் கடமான்கள் புகுந்து வெண்டைக்காய், தக்காளி பயிர்களை சேதப்படுத்தின.
கடமான்கள் புகுந்தன
களக்காடு அருகே உள்ள சிவபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் தர்மலிங்கம் (வயது 39). இவருக்கு சொந்தமான விளைநிலங்கள் சிவபுரம் கிராமத்திற்கு அருகே உள்ளது. அதில் அவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் வெண்டைக்காய், தக்காளி பயிர் செய்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவில் கடமான்கள் தர்மலிங்கத்துக்கு சொந்தமான விளைநிலங்களில் புகுந்து, வெண்டைக்காய், தக்காளி பயிர்களை தின்றன. இதனால் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த வெண்டைக்காய், தக்காளி பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்தன.
இழப்பீடு வழங்க கோரிக்கை
நேற்று காலை விளைநிலங்களுக்கு சென்ற விவசாயி தர்மலிங்கம், பயிர்கள் நாசமாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் அங்கு சென்று நாசமான பயிர்களை பார்வையிட்டனர். ஏற்கனவே இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடமான்களும் பயிர்களை துவம்சம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விளைநிலங்களுக்குள் புகும் காட்டுப்பன்றி, கடமான்களை விரட்டவும், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.