மோர்தானா அணை கால்வாய் நீரை ஏரிக்கு திருப்பக்கோரி சாலை மறியல்
மோர்தானை அணை கால்வாய் நீரை ஏரிக்கு திருப்பக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
கே.வி.குப்பத்தை அடுத்த, ஆலங்கநேரி ஊராட்சி அருகில் மோர்தனா அணையின் இடதுபுறக் கால்வாய் சென்று லத்தேரி அருகே உள்ள செஞ்சி ஆயக்குளத்தில் முடிகிறது. தற்போது பெய்துவரும் மழை காரணமாக இந்த கால்வாயில் அதிக அளவில் வெள்ளம் செல்கிறது. அதே நேரத்தில் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஆலங்கநேரி ஏரி சுமார் 40 வருடங்களாக நீர் வரத்திற்கு வழி இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
எனவே வீணாகச் செல்லும் மோர்தானா அணை நீரை நீர்வரத்துக் கால்வாய் அமைத்து ஆலங்கநேரி ஏரிக்குத் திருப்பவேண்டும். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று கோரிக்கை வைத்து, ஆலங்கநேரி பஸ் நிறுத்தத்தில் விவசாயிகள், பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏரிக்கு திருப்ப வேண்டும்
சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் நடைபெற்றது. தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா கருணாகரன், போலீசார், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சென்ற ஆண்டும் மோர்தானா இடதுபுற கால்வாய் நீர் வீணாக சென்றது. இதைத் தடுத்து வயல்களின் வழியாக தற்காலிகமாகப் பாதை அமைத்து ஏரிக்குத் தண்ணீரை எடுத்துச் சென்று ஓரளவு சேமித்தோம். அதேபோல் வயல்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இந்த ஆண்டாவது நிரந்தர கால்வாய் அமைத்து ஏரிக்கு உபரி நீரைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.