கும்பகோணத்தில், புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணத்தில், வடமாநில ஆடை விற்பனையாளர்கள் குவிந்தனர். மேலும் புத்தாடைகள், இனிப்புகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கும்பகோணம் மாநகரம் திக்குமுக்காடியது.
கும்பகோணம்;
தீபாவளி பண்டிகையையொட்டி கும்பகோணத்தில், வடமாநில ஆடை விற்பனையாளர்கள் குவிந்தனர். மேலும் புத்தாடைகள், இனிப்புகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கும்பகோணம் மாநகரம் திக்குமுக்காடியது.
தீபாவளி
தீபாவளி பண்டிகை 24-ந் தேதி(திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் தங்கள் வீட்டில் பலகாரம் செய்தல், புதிய ஆடைகளை வாங்குதல், உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கியதால் நேற்று கும்பகோணம் அருகே உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானவர்கள் கும்பகோணத்திற்கு வந்தனர்.இதனால் கும்பகோணம் நகரின் முக்கிய பகுதிகள் மக்கள் கூட்டத்தால் திக்முக்காடியது. அவர்கள் அனைவரும் வீட்டுக்கு தேவையான விழாக்கால பொருட்களை வாங்குவதற்காக கும்பகோணத்தின் மையப் பகுதியான நாகேஸ்வரன் கோவில் வடக்கு வீதி, காந்தி பார்க், மடத்து தெரு, மகா மகக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வந்து குவிந்ததால் ஆங்காங்கே போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டது.
வட மாநில ஆடை விற்பனையாளர்கள்
இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் தீபாவளி விற்பனைக்காக உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, ஆகிய பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சிறு தொழில் செய்யும் ஜவுளி வியாபாரிகள் தங்களது பொருட்களை அந்தந்த மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து கடை வீதியில் உள்ள தெருக்களில் விற்பனை செய்தனர்.
பொதுமக்கள் ஆர்வம்
இது குறித்து வட மாநில வியாபாரிகள் கூறியதாவதுஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று நாங்கள் எங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறோம். உற்பத்தி செய்கின்ற இடத்தில் மொத்தமாக கொள்முதல் செய்வதனால் எங்களுக்கு துணிகள் விலை குறைவாக கிடைக்கிறது. இதை குறைந்த அளவு லாபம் வைத்து பொதுமக்களிடம் விற்று வருகிறோம். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.குறிப்பாக மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் எங்களது பொருட்களை தமிழ் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள். தமிழ்நாட்டில் எங்களது பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகும். தற்ேபாது தஞ்சை மாவட்ட கலாசாரத்துக்கு ஏற்றபடி ஆடைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால் எங்களது துணி வகைகளை வாங்குவதில் பொதுமக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது இவ்வாறு வியாபாரிகள் கூறினார்.