5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
பூம்புகாரில் ஏற்பட்ட கடல் சீற்றதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருவெண்காடு:
பூம்புகாரில் ஏற்பட்ட கடல் சீற்றதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
பூம்புகார் மற்றும் வானகிரி, புது குப்பம், மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேல மூவர்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்கள் உள்ளன. கடந்த 29-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பூம்புகார் கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து மேற்கண்ட கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் வளத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.இதனால் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 6 கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது படகுகளை பூம்புகார் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மீன்வரத்து இல்லாத காரணம்
இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த 10 நாட்களாகவே கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது கடலில் போதுமான மீன்வரத்து இல்லாத காரணத்தாலும், கடந்த சில வாரங்களாகவே மீன்பிடிக்க செல்லவில்லை. தொடர்ந்து மழை உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும். எனவே வருகிற ஜனவரி மாதம் அளவில் தான் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கடலில் போதுமான அளவிற்கு மீன்கள் கிடைக்காத காரணத்தால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம் என்றனர்.