50-க்கும் மேற்பட்ட வீடுகள்- வணிக வளாகங்கள் அகற்றம்
மயிலாடுதுறை அருகே சாலை அகலப்படுத்தும் பணிக்காக 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே சாலை அகலப்படுத்தும் பணிக்காக 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
இழப்பீட்டு தொகை
சென்னை- கன்னியாகுமரி தொழில்வழி தடத்திட்டத்தின் கீழ் கும்பகோணம் முதல் சீர்காழி வரை மயிலாடுதுறை வழியாக உள்ள பிரதான சாலை தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதில் மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி வரை செல்லும் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையின் இரு பக்கங்களிலும் தேவையான இடங்கள் கண்டறியப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பின்னர் இடத்திற்கான இழப்பீட்டு தொகையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அகற்றப்படாமல் இருந்தது.
வீடுகள்-வணிக வளாகங்கள் அகற்றம்
இந்தநிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நர்மதா தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் பொக்லின் எந்திரம் மூலம் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை அகற்றும் பணியை தொடங்கினர். நேற்று மட்டும் 50-க்கும் மேற்பட்ட வீடு மற்றும் வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.