காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம்அதிகரிப்பு
காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம்அதிகரிப்பு
திருப்பூர்
உடுமலை, காங்கயம், தாராபுரம் பகுதியில் காட்டுப்பன்றிகளால் விவசாய பயிர்கள் அதிகம் சேதமாகி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முறையிட்டனர்.
நெல் கொள்முதல் நிலையம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
ஈஸ்வரமூர்த்தி (உழவர் உழைப்பாளர் கட்சி) :-
பழைய அமராவதி பாசனத்துக்கு உட்பட்ட மண் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. அவற்றை தூர்வார வேண்டும். பிப்ரவரி மாதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் அதற்குள் பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் உடுமலை, பெதப்பம்பட்டி, காங்கயம், பொங்கலூர் பகுதியில் அமைந்துள்ளது. அலங்கியம் பகுதியில் கூடுதலாக பொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
தாராபுரம் பகுதியில் ஜனவரி மாத இறுதியில் நெல் அறுவடை தொடங்கும் நிலையில் உள்ளது. இதனால் பிப்ரவரி மாதத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லதங்காள் அணை கடந்த 2002-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த அணைக்கு 750 விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அப்போது மானாவாரி நிலத்துக்கு 1 ஏக்கருக்கு 9 ஆயிரம், பாசன நிலத்துக்கு ரூ.27 ஆயிரம் இழப்பீடு அறிவித்தது. ஆனால் அதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளாமல் கூடுதல் இழப்பீடு கோரி தாராபுரம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் மானாவாரிக்கு ரூ.70 ஆயிரம், பாசன நிலத்துக்கு ரூ.1 லட்சம் மற்றும் இதை 15 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
நிலத்துக்கு உரிய இழப்பீடு
அதன்பிறகு இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் மேல்முறையீடு செய்ததால் கடந்த 6 மாதத்துக்கு முன் தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அங்கு சென்ற கோர்ட்டு ஊழியர்களிடம் விரைவில் பணம் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதுவரையிலும் பணம் கிடைக்கவில்லை. எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். தாராபுரத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை ஒரே கட்டிடத்தில் அமையும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
விவசாயி பழனிசாமி:-
தாராபுரம் சுற்றுப்புற பகுதிகளில் வயல்களில் எலித்தொல்லை அதிகமாக உள்ளது. அதுபோல் காட்டுப்பன்றி, மயில் தொந்தரவு அதிகரித்துள்ளது. விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயி சுப்பிரமணியம்:-
எரகாம்பட்டி குளத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளார். அதுபோல் பி.ஏ.பி. கால்வாய் பாலத்தையும் தனியார் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளார். அதை அகற்ற வேண்டும்.
தென்னை விவசாயிகள்
பரமசிவம் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) :-
குண்டலம்பட்டி, உடுக்கம்பாளையம் கிராம பகுதிக்கு பஸ் வசதியில்லை. ஏற்கனவே வந்த தனியார் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. மக்கள் சிரமம் அடைகிறார்கள். வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தை முழுமையாக அதிகாரிகள் அளவீடு செய்து முறைகேடுகளை தடுக்க வேண்டும். காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி தொந்தரவு அதிகம் உள்ளது. அவற்றை அகற்ற வேண்டும். காட்டுப்பன்றி தாக்கி படுகாயம் அடைந்த பெண்ணுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை.
மதுசூதனன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) :-
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை. விவசாயிகள் சங்க பிரநிதிகளுக்கு கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை ஏற்கனவே உள்ளது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை இடவசதியுள்ள அரங்கில் நடத்த வேண்டும். தற்போது நடத்தப்படும் அரங்கு இடவசதி குறைவாக இருக்கைகள் போதுமான அளவு இல்லாமல் உள்ளது. வரும் ஆண்டிலாவது ஏற்கனவே நடந்த பெரிய அரங்கில் நடத்த வேண்டும். தென்னை விவசாயிகள் மாவட்டத்தில் அதிகம் உள்ளனர். தென்னை மட்டை ஒன்று ரூ.3-க்கு சென்றது இப்போது 20 பைசாவுக்கு எடுக்கிறார்கள். சிரட்டை 1 டன் ரூ.14 ஆயிரத்துக்கு சென்றது. இப்போது ரூ.10 ஆயிரமாக குறைந்து விட்டது. தென்னை விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கடைகளில் விலைப்பட்டியலை தெரியும் படி வைக்க உத்தரவிட வேண்டும். பி.ஏ.பி. திட்டத்தில் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாசனம் பெறும் வகையில் மடைவிட்டு மடை தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. எனவே நல்லாறு அணைத்திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயிகளுக்கு பாசன தண்ணீர் கிடைக்கும். அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கட்டுப்படுத்த நடவடிக்கை
இதற்கு வனத்துறை அதிகாரி கணேஷ்ராம் பேசும்போது, 'காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வனத்துறையிடம் முறையிட்டால் உடனடியாக உரிய இழப்பீடு வழங்கப்படும். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து மண்டல அளவில் கமிட்டி உருவாக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ள இடத்தில் புதர்களை அகற்றி வனப்பகுதிக்குள் விரட்டுவது உள்ளிட்டவை மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காங்கயம், தாராபுரம் பகுதியில் 2 ஆயிரம் மான்கள் உள்ளன. அவற்றை அகற்றுவது என்பது சிக்கலான விசயம்' என்றார்.
-------
(பாக்ஸ்)
கூட்டத்தில் விவசாயிகளுக்குள் சலசலப்பு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதலில் கோரிக்கைகள் குறித்து பேசுவார்கள். அதன்பின்னர் விவசாயிகள் தனித்தனியாக தங்கள் கோரிக்கைகள் குறித்து முறையிடுவது வழக்கம். நேற்று கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர், 'தனியாக வரும் விவசாயிகள் பேச தாமதம் ஆகிறது. சில நாட்களில் விவசாயி பேச முடியவில்லை. விவசாய சங்க பிரதிநிதிகள் தான் பேசுகிறார்கள். முதலில் மனு கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்றார். இதை கேட்டதும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் எழுந்து, 'கூட்டத்தில் முதலில் சங்க பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பொதுவான குறைகளை விவசாயிகளுக்காகவே தெரிவிக்கிறோம்' என்றனர். இதனால் அவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. கலெக்டர் தலையிட்டு, 'அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்கள் முதலில் பொதுப்பிரச்சினை பற்றி பேசுகிறார்கள்' என்றார்.
இதுபோல் கூட்டத்துக்கு வந்து 5 வது மனுவாக பதிவு செய்த பின்னரும், கூட்டத்தில் பேசுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று விவசாயி சத்தம் போட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர்.