அரசு கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதல்
பல்லடம் பஸ் நிலையத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த மோதல் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.
பல்லடம் அரசு கல்லூரி
பல்லடத்தில் உள்ள அரசு கல்லூரியில் பல்லடம், திருப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று முன் தினம் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் மாணவ-மாணவிகள் வெளியே வந்தனர். சில மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு பஸ்சில் செல்வதற்கு பல்லடம் பஸ் நிலையம் வந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ெபாதுமக்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து மார்க்கெட்டுக்குள் செல்லும் வழியில் மாணவர்கள் மோதிக் கொண்டனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அங்கிருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் சத்தம் போடவே கல்லூரி மாணவர்கள் மோதலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. அவர்கள் எதற்காக மோதிக்கொண்டனர் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே மாணவர்கள் மோதும் வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் " பல்லடம் பஸ் நிலையத்தில் அடிக்கடி மாணவர்கள் மோதல் சம்பவங்கள் நடைபெறுகிறது. மேலும் பயணிகளிடம் பிக் பாக்கெட் மற்றும் உடைமைகள் திருடுவது போன்ற குற்ற செயல்களும், ரவுடிகளின் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் கூட பஸ் நிலையத்தில் பெயிண்டர் ஒருவரை கொலை செய்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. எனவே பஸ் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு நிரந்தரமாக போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.