பிரசவத்தின்போது தாய் குழந்தை சாவு
கல்வராயன்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது தாய், குழந்தை பரிதாபமாக இறந்தனர். செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கச்சிராயப்பாளையம்
தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கீரிப்பிள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 28). தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (24). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.
திருமணத்திற்கு பிறகு பாக்கியராஜ் ஆலனூரில் உள்ள தனது மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார்.
தலைபிரசவம்
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை பிரசவத்துக்காக கல்வராயன்மலை சேராப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை 4 மணிக்கு அனுமதித்தனர். அப்போது அங்கு டாக்டர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.
பின்னர் இரவு 9 மணியளவில் மல்லிகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதையடுத்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மல்லிகாவும் பரிதாபமாக இறந்ததாக தெரிகிறது.
சாலை மறியல்
இதையறிந்து அங்கு வந்த மல்லிகாவின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் தாய், குழந்தை இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் மல்லிகாவுக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாகவும், இதனால் தான் தாய், குழந்தை இருவரும் இறந்ததாகவும், எனவே டாக்டர் இன்றி பிரசவம் பார்த்த செவிலியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது பற்றிய தகவல் அறிந்து வந்த கல்வராயன்மலை போலீசாரும், வருவாய்த்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியல் போராட்டத்தால் சங்கராபுரம்-சேராப்பட்டு சாலையில் சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தலை பிரசவத்துக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தையுடன் இறந்துபோன சம்பவம் ஆலனூர் கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.