வீடு புகுந்து கத்தி முனையில் தாய்-மகளை மிரட்டி நகை பறிப்பு


வீடு புகுந்து கத்தி முனையில் தாய்-மகளை மிரட்டி நகை பறிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 7:20 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே வீடு புகுந்து கத்திமுனையில் தாய்-மகளை மிரட்டி நகையை பறித்து விட்டு தப்பிய முகமூடி கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே வீடு புகுந்து கத்திமுனையில் தாய்-மகளை மிரட்டி நகையை பறித்து விட்டு தப்பிய முகமூடி கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.

முகமூடி கொள்ளையன்

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பளுகல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மாங்காலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி. இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அஜிதா (வயது 42). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அஜிதாவும், அவரது மகளும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த கொள்ளையன் நைசாக வீட்டுக்குள் புகுந்தான்.

பெண்ணிடம் நகை பறிப்பு

பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அஜிதா அணிந்திருந்த 1 பவுன் தாலியை பறித்ததோடு, சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என மிரட்டினான். இதனை சற்றும் எதிர்பாராத அஜிதா, அவரது மகள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து கத்தி முனையிலேயே அவர்களை மிரட்டியபடி கதவை திறந்து அந்த ஆசாமி தப்பிச் சென்றான். உடனே தாயும், மகளும் திருடன், திருடன் என அலறினர்.

மாடி கதவை உடைத்து கைவரிசை

இந்த சத்தம் கேட்டு அங்கு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் கொள்ளையன் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டான்.

இதுகுறித்து பளுகல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் முகமூடி கொள்ளையன் மாடியில் உள்ள கதவை உடைத்து வீட்டுக்குள் இறங்கி கைவரிசை காட்டியது தெரியவந்தது. வீட்டு பீரோவில் இருந்த 2 பவுன் கம்மல், காப்புகளையும் கொள்ளையடித்து விட்டு கத்தி முனையில் அஜிதாவிடம் நகையை பறித்து விட்டு அங்கிருந்து கொள்ளையன் தப்பியுள்ளான்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கைரேகையை பதிவு செய்தனர்.

பின்னர் கொள்ளையன் பற்றி ஏதாவது துப்பு கிடைக்கிறதா? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முகமூடி கொள்ளையனை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story