தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியை சேர்ந்த ராஜூ மனைவி அம்மாலு (வயது 65). இவர் தனது மகள் அபிராமியுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தார். அப்போது அவர்கள் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் எடுத்து வந்தனர். இந்தநிலையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு வந்த தாயும், மகளும் திடீரென்று தங்களின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அபிராமி கூறுகையில், "எங்கள் உறவினர் ஒருவர் எனது தாயிடம் ரூ.5 லட்சமும், என்னிடம் ரூ.80 ஆயிரமும் கடன் பெற்றார். அந்த பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இந்தநிலையில், எனது அம்மாவுக்கு சொந்தமான பூர்வீக வீட்டை போலி ஆவணம் மூலம் அபகரித்துக்கொண்டு, எனது தாயை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதுகுறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்கொலைக்கு முயன்றோம்" என்றார்.
அப்போது மண்எண்ணெய் ஊற்றியதால் உடலில் ஏற்பட்ட எரிச்சல் தாங்காமல் அம்மாலு அலறினார். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால், ஒரு ஆட்டோவில் தாய், மகள் இருவரையும் போலீசார் ஏற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.