ரூ.3 கோடி மோசடி வழக்கில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மகனுடன் கைது
நகைகள் வாங்கி விற்பனை செய்வதில் ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.
நகைகள் வாங்கி விற்பனை செய்வதில் ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.
ரூ.3 கோடி மோசடி
ஆண்டிப்பட்டியில் நகைக்கடை நடத்தி வந்தவர் முருகபாண்டி (வயது 44). இவர் மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் ஆபரண தங்கம் மொத்த வியாபாரம் செய்து வரும் வீரமணிகண்டன் (30) என்பவர் உள்பட பலரிடம் ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பில் நகைகளை வாங்கிவிட்டு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரமணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் முருகபாண்டி மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே முருகபாண்டி நடத்திய நகைக்கடையில் நகைகள் செய்து கொடுப்பதாக கூறி சிலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி பாதிக்கப்பட்ட 12 ேபர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். அவர்களிடம் மொத்தம் ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்துள்ளதாகவும் முருகபாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, மொத்தம் ரூ.3 கோடியை முருகபாண்டி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதையடுத்து தலைமறைவாக இருந்த முருகபாண்டியை கடந்த ஜூன் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இந்த மோசடியில் அவருடைய மனைவி சாந்தி (41), மகன் வீரவிக்னேஷ் (23) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும், நகைகள் மோசடியில் அவர்களும் உடந்தையாக இருந்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.
அதன்பேரில், சாந்தி, வீரவிக்னேஷ் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாயகி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.