திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி
x

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள், தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்தனர். இவர்களில் யாராவது மண்எண்ணெய், பெட்ரோல் வைத்து இருக்கிறார்களா? என்று போலீசார் சோதனை செய்து, கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்குக்குள் ஒரு பெண், சிறுவனுடன் வந்தார். பின்னர் திடீரென்று அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலிலும், சிறுவனின் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதை பாதுகாப்புக்காக நின்ற போலீசார் பார்த்ததும் துரிதமாக செயல்பட்டு தீக்குளிக்க விடாமல் தடுத்து 2 பேரையும் மீட்டனர். மேலும் அவர்களை வெளியே அழைத்து வந்து உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசாார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

வீட்டை விற்றதால் விரக்தி

விசாரணையில், அவர்கள் பழனி சின்னகலையம்புத்தூர் பகுதியை சேர்ந்த நிர்மலா (வயது 55), அவருடைய 11 வயது மகன் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் கூறுகையில், நிர்மலா தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில் நிர்மலாவின் வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கணவர் மற்றொரு நபருக்கு விற்றதாக கூறப்படுகிறது. அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி மனு கொடுக்க வந்தவர் விரக்தியில் தீக்குளிக்க முயன்று இருப்பதாக கூறினர்.

இதையடுத்து அவருக்கு போலீசார் அறிவுரை கூறி மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் போலீசார் 3 இடங்களில் போலீசார் சோதனை நடத்துகின்றனர். அதையும் மீறி மண்எண்ணெயை அந்த பெண் மறைத்து எடுத்து சென்று கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story