தாய் உயிரோடு எரித்துக்கொலை; மகன்-மருமகள் அதிரடி கைது


நெல்லையில் பெண் மர்மமாக இறந்த சம்பவத்தில் துப்பு துலங்கியது. தாயை உயிரோடு எரித்துக் கொன்றதாக அவரது மகன், மருமகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் சிவசுப்பு. இவருடைய மனைவி அரசம்மாள் (வயது 70). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சிவசுப்பு ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அரசம்மாள் தனது மூத்த மகனான அண்ணாமலையுடன் (47) வசித்து வந்தார். இவருக்கு அனிதா (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 29-ந் தேதி வீட்டின் வளாகத்தில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது, அங்கு விறகு கட்டைகளுக்கு இடையே உடல் கருகிய நிலையில் அரசம்மாள் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அறிந்த நெல்லை தாலுகா போலீசார், அரசம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் தற்போது துப்பு துலங்கி உள்ளது. அதாவது, அரசம்மாள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே, நேற்று காலையில் கீழநத்தம் கிராம நிர்வாக அலுவலர் திரவிய கிருஷ்ணனிடம் அண்ணாமலை, அவரது மனைவி அனிதா ஆகியோர் அரசம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சரண் அடைந்தனர். 2 பேரையும் தாலுகா போலீசிடம், அவர் ஒப்படைத்தார்.

போலீசாரிடம் அண்ணாமலை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், எனது தாயார் அரசம்மாள் சொத்துக்கள் அனைத்தையும் எனது தம்பிக்கு எழுதி கொடுத்துவிட்டார். அதனால் தற்போது இருக்கும் வீட்டையாவது எனது பெயருக்கு எழுதி கேட்டு தகராறு செய்து வந்தேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த எனது மனைவி அனிதா சம்பவத்தன்று எனது தாயை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த நான் உடனடியாக வீட்டிற்கு வந்தேன். வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் இருந்த நாங்கள், மயங்கி கிடந்த எனது தாயார் அசரம்மாளை வீட்டின் வளாகத்தில் விறகு கட்டைகளுக்கு நடுவே வைத்து உயிரோடு எரித்து விட்டோம். இதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அண்ணாமலை, அனிதா ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். நெல்லையில் தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன், மருமகள் கைது செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Related Tags :
Next Story