கை குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் கைக்குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் கைக்குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடும்ப தகராறு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 31). இவர் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நதியா (29). இவர்களுக்கு ரித்திகா (7) மற்றும் 2 மாத பெண் குழந்தை உண்டு. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று முன்தினமும் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உமாபதி-நதியா மற்றும் குழந்தைகள் அனைவரும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாச்சம்பட்டு கிராமத்தில் வசிக்கும் உமாபதியின் அக்கா வீட்டிற்கு சென்றனர். அங்கு மீண்டும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
கை குழந்தையுடன் சாவு
இதனால் நதியா கைக்குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அருகே உள்ள கிணற்றில் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது நதியாவும், குழந்தையும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே பொதுமக்கள் கிணற்றில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டனர். இது குறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து நதியா கைக் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.