குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை


குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
x

பட்டுக்கோட்டை அருகே, குடும்பத்தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை புது நகரை சேர்ந்தவர் ஜான்ராஜ்(வயது 26). கூலித் தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த மாலதி(24) என்பவரும் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷன் (2) என்ற மகன் இருந்தான். கடந்த ஓராண்டாக ஜான்ராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாத நிலையில், மாலதி மகளிர் சுய உதவிக்குழு மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த மாலதி அதனை கட்டுவதற்காக அருகில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி செலுத்தியுள்ளார். இதனால் ஜான்ராஜூக்கும், மாலதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை

இந்தநிலையில் நிதி நிறுவனத்துக்கு செலுத்த பணம் இல்லாத சூழலில், மாலதி மிகவும் மன உளைச்சலில் கடந்த 2 நாட்களாக இருந்துள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாலதி வீட்டில் இருந்த குருணை மருந்தை(விஷம்) தனது 2 வயது குழந்தைக்கு கொடுத்து கொன்று விட்டு தானும் தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்டதும் அருகில் இருந்தவர்கள் மாலதியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மாலதி இறந்தார். இதுகுறித்து மாலதியின் தந்தை மகேந்திரன் அளித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story