பிளஸ்-2 மாணவியுடன் தாய் தற்கொலை
சிவகாசியில் பிளஸ்-2 மாணவியுடன், அவருடைய தாயார் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மகன் நினைவு நாளையொட்டி இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
சிவகாசி,
சிவகாசியில் பிளஸ்-2 மாணவியுடன், அவருடைய தாயார் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மகன் நினைவு நாளையொட்டி இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அங்கன்வாடி பணியாளர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லைன் திருப்பதி நகரை சேர்ந்தவர் சாலைமுத்து மனைவி பாண்டிதேவி (வயது 37). இவர் சித்துராஜபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் பணியாற்றி வந்தார். இவர்களுடைய மகன் மகாராஜன், மகள் புவனேசுவரி (17). இவர் சாட்சியாபுரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்ததாக கூறப்படுகிறது.
கட்டிட தொழிலாளியான சாலைமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில், மகன் மகாராஜா கடந்த வருடம் இறந்துவிட்டார். இதனால் பாண்டிதேவி தனது தாய் ஞானபழம், மகள் புவனேசுவரியுடன் வசித்து வந்துள்ளார். கணவன், மகன் இருவரும் இறந்த நிலையில் பாண்டிதேவி மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தாய்-மகள் தற்கொலை
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக புவனேசுவரி பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மூதாட்டி ஞானபழம் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது வீடு பூட்டி கிடந்தது. நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் அதே பகுதியை சேர்ந்த சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு பாண்டிதேவியும், அவரது மகள் புவனேசுவரியும் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தாய்-மகள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிறந்தநாள்
மகாராஜா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி இறந்தார். இந்தநிலையில் இன்று அவனுடைய இறந்த நாள் ஆகும்.
இதனால் மனவேதனையில் இருந்த பாண்டிதேவி, தனது மகளுடன் திடீெரன தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மகன் நினைவுநாளையொட்டி தாயும், சகோதரியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.