2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை
கந்தம்பாளையம் அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கந்தம்பாளையம்
அடிக்கடி தகராறு
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள வெட்டுக்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 30). இவர் சரக்கு ஆட்டோ மற்றும் வேன் சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு திவித் (5), தர்ஷன் (3) என இரு மகன்கள் இருந்தனர். தனசேகரன் தினமும் இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து சசிகலாவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு தனசேகரன், சசிகலாவிடம் தகராறு செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த சசிகலாவின் தந்தை கரப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, சசிகலாவின் வீட்டிற்கு வந்து 'வா, நமது வீட்டுக்கு போகலாம்' என்று கூறினார். அதற்கு சசிகலா 'இல்லை, நீங்கள் கிளம்புங்கப்பா நான் காலையில் வருகிறேன்' என்று பழனிசாமியிடம் தெரிவித்தார். இதனால் அவர் சென்று விட்டார். அடிக்கடி கணவர் குடித்து விட்டு தகராறு செய்து வந்ததால் மனம் உடைந்த சசிகலா அதிகாலையில் தனது மொபட்டில் 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றுக்கு சென்று இருக்கிறார்.
கிணற்றில் வீசினார்
கிணற்றின் அருகே மொபட்டை நிறுத்திய சசிகலா, 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் நேற்று காலை வீட்டுக்கு வருவதாக கூறிய மகள் வராததால் சந்தேகம் அடைந்த பழனிசாமி, வெட்டுக்காட்டுபுதூருக்கு வந்தார். அப்போது தனசேகரன் தூங்கிக் கொண்டு இருந்தார்.
தனது மகளையும், இரண்டு பேரன்களையும் காணாததால் அவர்களை தேடி, பழனிசாமி அருகே உள்ள கிணற்றுக்கு சென்று பார்த்தார். அப்போது அவருடைய மகள் சசிகலாவும், 2 குழந்தைகளும் தண்ணீரில் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் கிணற்றில் இறங்கி 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்திவேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜமுரளி, நல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சசிகலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்து ஏராளமானவர்கள் அங்கு குவிந்தனர். மேலும் அவரது உறவினர்கள் சசிகலா மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. இதனிடையே சசிகலாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் நாமக்கல் மாவட்ட உதவி கலெக்டர் ரமேஷ் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அந்த கிராமமே சோகமாக காட்சி அளிக்கிறது.