மின்விசிறிகளில் தொங்கிய தாய்-இளம்பெண் பிணங்கள்


உசிலம்பட்டி அருகே மின்விசிறிகளில் தொங்கிய தாய்-இளம்பெண் பிணங்கள் மீட்கப்பட்டன. அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே மின்விசிறிகளில் தொங்கிய தாய்-இளம்பெண் பிணங்கள் மீட்கப்பட்டன. அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

குடும்ப தகராறு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழப்புதூர் மாயாண்டித்தேவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா(வயது 61). இவருடைய மனைவி சரஸ்வதி (55). இவர்களது மகன் குமரேசன் (29). மகள் யமுனா (27). இவரை கருத்திவீரன்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் (30) என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளனர்.. ரவிக்குமார் உசிலம்பட்டியில் ரெடிமேட் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் யமுனாவிற்கும் அவரது கணவரான ரவிக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதில் யமுனா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்து இருக்கிறார். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்தில் யமுனா புகார் செய்திருந்தார்.

தாய்-மகள் தற்கொலை

இந்த நிலையில் நேற்று ராஜா வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி சரஸ்வதியும், மகள் யமுனாவும் இருந்தனர். நேற்று மாலை நீண்ட நேரம் ஆகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று கதவை தட்டினார்கள். உள்ளே இருந்து பதில் எதுவும் வராததால் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு சரஸ்வதியும், யமுனாவும் வெவ்வேறு அறையில் மின்விசிறிகளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து,விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story