தாய்-மகள் தர்ணா போராட்டம்
நெல்லை கலெக்டர் பங்களா முன் தாய்-மகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் பங்களா முன் தாய்-மகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தாய்-மகள் தர்ணா
பாளையங்கோட்டை அருகே கல்குறிச்சியைச் சேர்ந்தவர் புதியமுத்து. இவருடைய மகள் ஜோதிலட்சுமி (வயது 50). இவர் நேற்று தன்னுடைய தாயாருடன் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை கலெக்டர் பங்களாவிற்கு வந்தார்.
பின்னர் அவர்கள், பங்களா முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கலெக்டர் முகாம் அலுவலக ஊழியர்கள், ஐகிரவுண்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலக முகாம் ஊழியர்களிடம், ஜோதிலட்சுமி மனு வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கோவிலில் அனுமதிக்க...
கல்குறிச்சி பகுதியில் உள்ள கோவிலில் என்னுடைய தந்தை புதியமுத்து சாமியாடி வந்தார். அவர் இறந்த பின்னர் எங்கள் குடும்பத்தினரை அந்த கோவிலில் அனுமதிக்க மற்றொரு தரப்பினர் மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளேன்.
இந்த நிலையில் எங்களை எதிர்தரப்பினர் மிரட்டுகின்றனர். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். இதையடுத்து போலீசார் எங்களது வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.