வீடு புகுந்து தாய், மகளை கொன்று நகை கொள்ளை


வீடு புகுந்து தாய், மகளை கொன்று நகை கொள்ளை
x

நகைக்காக தாய், மகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இவா்களுக்கு ஆலன் (25), ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜூம், ஆலனும் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். ஆரோன் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக, அவருடைய தாயார் திரேசம்மாள் (90) உடன் வசித்து வந்தார். பவுலின் மோி தனது வீட்டில் தையல் வகுப்பும் நடத்தி வந்தார்.

ரத்த வெள்ளத்தில் பிணங்கள்

இந்த நிலையில் நேற்று பவுலின் மேரியும், திரேசம்மாளும் வீட்டின் முன்அறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது தலையில் பலத்த காயம் இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பவுலின் மேரி மற்றும் திரேசம்மாள் ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் காதில் அணிந்திருந்த கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது.

நகைகள் கொள்ளை

இதை வைத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் 2 பெண்கள் மட்டும் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 2 பேரையும் பயங்கர ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்ததோடு அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story