டிராக்டரை ஏற்றி கள்ளக்காதலனுடன் மாமியார் படுகொலை மருமகன் கைது


டிராக்டரை ஏற்றி கள்ளக்காதலனுடன் மாமியார் படுகொலை மருமகன் கைது
x

டிராக்டரை ஏற்றி கள்ளக்காதலனுடன் மாமியாரை கொலை செய்த மருமகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 48). இவருக்கும், சென்னையில் உள்ள பணக்கார குடும்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

கணவரிடம் இருந்து அதிகளவு பணம் வாங்கிய கொளஞ்சி, தனது சொந்த ஊரான தொளார் கிராமத்தில் 3 ஏக்கர் விவசாய நிலம் வாங்கினார். புதிய வீடும் கட்டி முடித்தார்.

இதனிடையே கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் திடீரென இறந்தார். இதையடுத்து தொளாரில் உள்ள புது வீட்டில் கொளஞ்சி தனியாக வசித்து வந்தார். இவரது தங்கை மகள் சீதா. இவரது கணவர் அன்பழகன் (35). இவர்கள் குடும்பத்துடன் கொளஞ்சியின் வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்தனர். இதில் அன்பழகன், உறவினருக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டி வருகிறார்.

கள்ளக்காதல்

இந்தநிலையில் கொளஞ்சிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த செல்லதுரை (50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். அதுமட்டுமின்றி செல்லதுரை அடிக்கடி கொளஞ்சியின் வீட்டுக்கு வந்து சென்றார். செல்லதுரைக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் அன்பழகனும், கொளஞ்சியின் தம்பியான முருகேசனும் (45) அதிர்ச்சி அடைந்தனர். கள்ளக்காதல் ஜோடியை இருவரும் கண்டித்தனர். ஆனால் கள்ளக்காதல் ஜோடியோ அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் கொளஞ்சியின் நிலம், வீடு உள்ளிட்ட அனைத்தும் செல்லத்துரைக்கு சென்று விடுமோ? என்ற அச்சம் அன்பழகனுக்கும், முருகேசனுக்கும் ஏற்பட்டது.

டிராக்டரை ஏற்றி கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கொளஞ்சியும், செல்லதுரையும் மொபட்டில் பக்கத்து ஊருக்கு சென்று விட்டு தொளாருக்கு வந்தனர். அப்போது தொளாரில் உள்ள பழவாறு பாலத்தில் மொபட்டை நிறுத்தி விட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அன்பழகனும், முருகேசனும் அந்த வழியாக டிராக்டரில் வந்தனர். பாலத்தில் கள்ளக்காதல் ஜோடி கொஞ்சி, கொஞ்சி பேசிக்கொண்டிருந்ததை கண்டதும் அன்பழகனுக்கும், முருகேசனுக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. இருவரும் டிராக்டரை ஏற்றி கள்ளக்காதல் ஜோடியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி அன்பழகன், டிராக்டரை வேகமாக ஓட்டிச்சென்று கொளஞ்சி மற்றும் செல்லதுரை மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இருவரும் இறந்ததை உறுதி செய்ததும் முருகேசன் தப்பி சென்று விட்டார்.

2 பேர் கைது

இதனை தொடர்ந்து அன்பழகன், அதே டிராக்டரில் திட்டக்குடி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அப்போது அவர், டிராக்டரை ஏற்றி தனது மாமியாரையும், அவரது கள்ளக்காதலனையும் கொலை செய்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ந்துபோன போலீசார், நடந்த சம்பவம் குறித்து முழுமையாக கேட்டுக்கொண்டனர்.

பின்னர் போலீசார் தொளாருக்கு விரைந்து சென்று கொளஞ்சி, செல்லதுரை ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுங்கி இருந்த முருகேசனை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.


Next Story