4 குழந்தைகளின் தாய் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை
காவேரிப்பாக்கம் அருகே மது குடிப்பதை கண்டித்ததால் விரக்தி அடைந்த 4 குழந்தைகளின் தாய் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பாக்கம் அருகே மது குடிப்பதை கண்டித்ததால் விரக்தி அடைந்த 4 குழந்தைகளின் தாய் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுகுடித்ததை கண்டித்தனர்
காவேரிப்பாக்கம் அடுத்த அமராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் குப்பன் (வயது 30). அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஓச்சேரி அருகே உள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் மகள் சுகந்தி (25) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதியினருக்கு பிரியா (10), தரணி (7), விக்னேஷ் (5), சூரியா (2) என நான்கு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சுகந்தி அதிகமான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கணவர் மற்றும் சுகந்தியின் அம்மா மல்லிகா (50), ஆகிய இருவரும் கண்டித்துள்ளனர்.
தற்கொலை
மேலும் அமராபுரம் பகுதியில் வேலை இல்லாத காரணத்தால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுகந்தியின் தாய்வீடான களத்தூர் பகுதிக்கே குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளனர். அப்போதும் கணவன்- மனைவி இருவரும் கூட்டாக சேர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். அப்போதும் சுகந்தி அதிகமான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் கணவர் மீண்டும் கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் விரக்தி அடைந்த சுகந்தி நேற்று முன்தினம் மதுவில் கொக்கு மருந்து (விஷம்) கலந்து குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது தாய் மல்லிகா அவளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.