தத்து கொடுத்த 3-வது குழந்தையை கேட்டு தாய் பாசபோராட்டம்-ஒரு மாதம் வளர்த்த பெண், போலீஸ் நிலையத்தில் கண்ணீர்
தாரமங்கலம் அருகே தத்துகொடுத்த 3-வது குழந்தையை கேட்டு தாய் போலீஸ் நிலையத்தில் பாசப்போராட்டம் நடத்தினார். ஒரு மாதம் வளர்த்த பெண் குழந்தையை பிரிந்து கண்ணீர் சிந்தினார்.
தாரமங்கலம்:
3-வது பெண் குழந்தை
தாரமங்கலம் அருகே சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 36), இவருடைய மனைவி பிரியா (28). இவர்களுக்கு 2 பெண்கள் உள்ளனர். தற்போது பிரியா 3-வதாக பெண் குழந்தையை பெற்று எடுத்தார். 3 பெண் குழந்தைகளையும் வளர்க்க மிகவும் சிரமமாக இருக்கும் என்று உறவினர் ஒருவா் பழனிசாமி- பிரியா தம்பதியிடம் கூறினர். மேலும் குழந்தை இல்லாதவர்களுக்கு தத்து கொடுத்தால் அவர்கள் குழந்தையை நன்றாக வளர்த்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
கணவனும், மனைவியும் முதலில் தயங்கினர். பின்னர் தத்து கொடுக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி சேலம் அரியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகி 25 ஆண்டுகளாக குழந்தை இல்லாத சீனிவாசன்- கனகரத்தினம் தம்பதிக்கு குழந்தையை தத்து கொடுத்தனர். வக்கீல் ஒருவரது ஆலோசனையின் பேரில் நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் எழுதி கொடுத்து குழந்தையை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.
பாசப்போராட்டம்
இதற்கிடையே 3-வது குழந்தையை பிரிந்து பிரியாவால் இருக்க முடியவில்லை. தன்னுடைய குழந்தையை தருமாறு கேட்டுள்ளனர். பின்னர் கணவனும், மனைவியும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் முறையிட்டனர். அதன்படி தாரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு பழனிசாமியும், பிரியாவும் வந்தனர். குழந்தையை தத்து வாங்கிய தம்பதியும் வந்தனர்.
அவர்களிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி குழந்தை பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தத்துக்கொடுத்த குழந்தையை ெபற்றுக்கொள்ள பாசப்போராட்டம் நடத்திய தாயை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்தனர். அதேநேரத்தில் ஒரு மாதம் குழந்தையை வளர்த்த பெண், பிரிய மனம் இல்லாமல் கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.