தாய்மார்கள் தானமாக கொடுக்கும் பால் மூலம் 1200 குழந்தைகள் பயன்


தாய்மார்கள் தானமாக கொடுக்கும் பால் மூலம் 1200 குழந்தைகள் பயன்
x

கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் செயல்படும் தாய்ப்பால் வங்கியில் தாய்மார்கள் தானமாக கொடுக்கும் பால் மூலம் இதுவரை 1200 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

கடலூர்

தாய்ப்பால் வங்கி

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வங்கி சத்தமில்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதாவது, கடந்த 30.8.2021-ம் ஆண்டு இந்த சிறப்பான சேவை தொடங்கியது. குழந்தை பிறந்த அனைவருக்கும் தாய்ப்பால் தானம் தருவயஉது குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதன்படி விருப்பம் உள்ள தாய்மார்கள் தானாக முன்வந்து தாய்ப்பால் தானமாக வழங்கி வருகிறார்கள்.

இது பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை குழந்தை நல டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

8 ஆயிரம் மி.லி. பதப்படுத்தி...

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிசு பராமரிப்பு பிரிவில் தாய்ப்பால் வங்கி கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தாய்ப்பால் வங்கியில் ஒரு மாதத்திற்கு 7 ஆயிரம் மில்லி லிட்டர் முதல் 8 ஆயிரம் மில்லி லிட்டர் வரை தாய்ப்பால் சேகரித்து பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி., கொரோனா பாதிப்பு, எச்.சி.வி., மார்பக தொற்று போன்ற நோய் பாதிப்புகள் உள்ள தாய்மார்கள், கீமோதெரபி சிகிச்சை எடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலை தானமாக பெறுவதில்லை. தாய்மார்களின் தாய்ப்பாலை வங்கியில் சேகரித்த பிறகு, பதப்படுத்தி ஒவ்வொரு தாய்மாரின் தாய்ப்பாலை தனித்தனி டப்பாக்களில் அடைத்து பிரீசரில் வைக்கிறோம். சேகரித்து வைத்த ஒவ்வொரு தாய்மாரின் தாய்ப்பாலை பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி பரிசோனை செய்த பிறகே குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்.

1200 குழந்தைகள் பயன்

இந்த தாய்ப்பாலை சிசு பராமரிப்பு பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர இயலாத தாய்மார்களின் குழந்தைகள், குறைமாத, எடை குறைந்த குழந்தைகள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு, குழந்தையின் உறவினர்களிடம் கையொப்பம் பெற்று தான் வழங்கி வருகிறோம்.

சேகரித்து வைத்த தாய்ப்பாலை 6 மாத காலத்திற்கு பதப்படுத்தி பயன்படுத்தி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் 1200 குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வழங்கி இருக்கிறோம். ஊட்டச்சத்து குறைபாட்டால் மட்டும் ஒரு மாதத்திற்கு 20 குழந்தைகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் தானமாக கொடுக்கப்படுகிறது. இவ்வாறு டாக்டர் செந்தில்குமார் கூறினார்.


Next Story