மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி
x

பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள்.

தஞ்சாவூர்

பேராவூரணி;

பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பொங்கல் சீர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கழனிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் அருண்குமார்(வயது 29), விக்னேஷ்(23) பிரகாஷ்(20). இவர்கள் 3 பேரும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.இவர்கள் 3 பேரும் வெளியூரில் உள்ள விக்னேஷ் உறவினர் வீட்டிற்கு சென்று பொங்கல் சீர் கொடுத்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரகாஷ் ஓட்டி வந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்

அப்போது எதிர் திசையில் பேராவூரணி அருகேயுள்ள மணக்காடு பகுதியை சேர்ந்த சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்த கார்த்தி(26) மற்றும் அவரிடம் வேலை செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சுப்பிரமணியபுரம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்(25), செண்பகப்பாண்டியன்(26) ஆகிய 3 பேரும் ஊமத்தநாடு பகுதியில் பொங்கல் விழாவிற்காக மைக் செட் அமைத்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை கார்த்தி ஓட்டி வந்தார்.பூக்கொல்லையில் இருந்து ஊமத்தநாடு செல்லும் சாலை வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

3 பேர் பலி

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அருண்குமார், விக்னேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கார்த்தி பரிதாபமாக இறந்தார்.படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான அருண்குமாருக்கு குழந்தை பிறந்து 20 நாட்களே ஆகிறது. கார்த்திக்குக்கு திருமணமாகி மனைவி உள்ளார். விபத்து குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story