மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடும் மர்மகும்பல்


மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடும் மர்மகும்பல்
x

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டர் சைக்கிளை குறி வைத்து திருடும் மர்மகும்பலை போலீசார் பொறி வைத்து பிடிப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், டிச.25-

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டர் சைக்கிளை குறி வைத்து திருடும் மர்மகும்பலை போலீசார் பொறி வைத்து பிடிப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான ஆஸ்பத்திரிகளில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியும் ஒன்றாகும். சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.நோயாளிகளை பார்த்து நலம் விசாரிக்கவும் பலர் வந்து செல்வது உண்டு. இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், அவர்களை பார்க்க வருபவர்களின் தாகத்தை போக்க குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவு செயல்படும் புதிய கட்டிடத்தின் அருகேயும், பழைய கட்டிடத்தின் எதிரே கேண்டீனுக்கு அருகேயும் குடிநீர் குழாய் உள்ளது.

குறி வைத்து திருட்டு

மேலும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள், கார்கள் போன்றவற்றில் வருகின்றனர். அப்படி வருபவர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, நோயாளிகளை பார்ப்பதற்காக செல்கின்றனர். இப்படி நோயாளிகளை பார்க்க வருபவர்களின் மோட்டார் சைக்கிள்களை சிலர் குறி வைத்து திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.இதனால் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்வதற்கே பலர் அச்சப்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரியை பொருத்தவரை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தான் பெரும்பாலானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்து வைத்த பணத்தில் இருந்து தான் தங்களது வசதிக்காக மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

எதிர்பார்ப்பு

அவர்களது மோட்டார் சைக்கிளையும் மர்மகும்பல் விட்டு வைப்பது இல்லை. அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே திருடிச் சென்றுவிடுகின்றனர். இப்படி மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடக்கூடியவர்கள் ஒரு கும்பலாகவே செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதுபோன்ற மோட்டார் சைக்கிள்கள் திருட்டை தடுத்து நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், இந்த திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் சிலர் கூறும்போது, ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பவர்களை பார்க்க சந்தோஷமாக யாரும் வரமாட்டார்கள். வேதனையுடன் தான் நோயாளிகளை பார்க்க வருகிறோம். அப்படி வேதனையுடன் வரக்கூடியவர்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கும் நிகழ்வுகள் தான் அடிக்கடி நடக்கிறது. தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இவர்களில் பலர் மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்த்துவிட்டு தங்களது வேலைகளையும் தடங்கல் இன்றி பார்க்க வேண்டும் என்பதற்காகவே மோட்டார் சைக்கிளில் பலர் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருடர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story