மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது
திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முத்துக்குமார் (வயது 40). இவர் திருச்செந்தூரில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 9-ந் தேதி இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த 16 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவன் நெல்லை பேட்டையை சேர்ந்தவன் என்றும், முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.