மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு; வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்
களக்காடு:
களக்காடு புதுத்தெருவை சேர்ந்தவர் யாபேஸ் செல்வ ஜான்சன் (42). கூலி தொழிலாளி. களக்காடு கப்பலோட்டிய தமிழன் தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் (26). கடந்த சில மாதங்களுக்கு முன் அகஸ்டினுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். யாபேஸ் செல்வஜான்சன் தான் தனது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக அகஸ்டின் கருதினார். இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று யாபேஸ் செல்வ ஜான்சன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த அகஸ்டின், மிஷின் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த விக்னேஷ் என்ற விக்கி (27) ஆகிய 2 பேரும் சேர்ந்து யாபேஸ் செல்வ ஜான்சனை அவதூறாக பேசினர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து யாபேஸ் செல்வ ஜான்சன் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, விக்னேஷை கைது செய்தனர். அகஸ்டினை தேடி வருகின்றனர்.