மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலியானார். நர்சிங் மாணவர் படுகாயம் அடைந்தார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலியானார். நர்சிங் மாணவர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
மரத்தில் மோதியது
மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் அஸ்வின் விஜய் (வயது 18). இவர் களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் விஜயகுமார் வீட்டுக்கு அவருடைய உறவினர் தடிக்காரன்கோணம் கேசவன்புதூரை சேர்ந்த செல்வகுமார் மகன் சஜின் குமார்(21) வந்தார். இவர் டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு, லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இரவு 9 மணி அளவில் சஜின்குமார் கிறிஸ்துமஸ் குடிலை பார்ப்பதற்காக அஸ்வின் விஜயின் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பின்னால் அஸ்வின் விஜய் உட்கார்ந்து பயணம் செய்தார். அந்த மோட்டார் சைக்கிள் மார்த்தாண்டம் அருகே உள்ள கல்லுகுட்டி குருமாணிவிளை முந்திரி ஆலை பகுதியில் செல்லும்போது திடீரென்று சாலையோரத்தில் நின்ற இலவ மரத்தில் மோதியது.
இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சஜின்குமாரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு சஜின்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
படுகாயம் அடைந்த அஸ்வின் விஜய் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.