ஸ்ரீமுஷ்ணம் அருகே நெல் அறுவடை எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
ஸ்ரீமுஷ்ணம் அருகே நெல் அறுவடை எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிாிழந்தாா்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரவி மகன் விக்னேஷ் (வயது 19). ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு பாத்திர கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பரான குணமங்கலத்தை சேர்ந்த அபிஷேக்குடன் ஒரு மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்தில் இருந்து குணமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முத்துக்கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த நெல் அறுவடை எந்திரத்தின் மீது இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அபிஷேக், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாாின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.