லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
வேப்பூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
வேப்பூர்,
வேப்பூர் அடுத்த ஐவதுகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர். இவருடைய மகன் அம்பேத்கர்(வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சவுந்தரபாண்டியனுடன் மோட்டார் சைக்கிளில் வேப்பூர் வந்தனர். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
வேப்பூர் கூட்டு ரோட்டில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர், திடீரென லாரியை திருப்பியதாக தெரிகிறது. இதனால் எதிர்பாராதவிதமாக லாரி மீது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
வாலிபர் பலி
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அம்பேத்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சவுந்தரபாண்டியன் மேல் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.