மோட்டார் சைக்கிள்கள் மோதல் டாஸ்மாக் ஊழியர் பலி
பகண்டை கூட்டுரோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் டாஸ்மாக் ஊழியர் பலி
ரிஷிவந்தியம்
பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வேலு(வயது 45). இளையனார்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று பணி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் அத்தியூர் கிராமம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அதேவேளையில் அத்தியூர் கிராமத்தில் இருந்து இளையானர்குப்பம் கிராமத்துக்கு அதேகிராமத்தை சேர்ந்த முருகன் மகன் பூபதி(21) மற்றும் பெருமாள் மகன் பன்னீர்செல்வம்(22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அத்தியூர்- பெரியகொள்ளியூர் இடையே வந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த வேலுவை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த பூபதி, பன்னீர்செல்வம் ஆகியோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். விபத்து குறித்து பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.