மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
நாலாட்டின்புத்தூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
மரத்தில் மோதியது
கழுகுமலை அருகே உள்ள குருவிகுளம் சி.எஸ்.ஐ. தெரு பகுதியை சேர்ந்த சத்யராஜ் மகன் ஜெயக்குமார் வயது (23). இவர் கேரளாவில் சித்த மருத்துவம் சம்பந்தமாக படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த கேட்டரிங் கல்லூரி மாணவரான இன்னாசிமுத்து மகன் சிவபாலன் (18) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார்சைக்கிளை ஜெயக்குமார் ஓட்டினார். வானரமுட்டி அருகே உள்ள கல்லூரணி கிராமத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வரும்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
பரிதாப சாவு
இதில் ஜெயக்குமாருக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சிவபாலனுக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இறந்த ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சிவபாலனுக்கு, அதே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.