பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x

பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

தனியார் நிறுவன ஊழியர்கள்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஸ்ரீதேவி மங்கலத்தை சேர்ந்த சீனிவாசனின் மகன் மணிகண்டன்(வயது 26). இவரும், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரை சேர்ந்த நாகேந்திரனின் மகன் வைத்தியநாதன் (26) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். மேலும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் அரியலூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டை அடுத்த பனமங்கலம் அருகே உள்ள புதிய பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் வைத்தியநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயமடைந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயம் அடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வைத்தியநாதன் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம சாவு

*திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சிலர் லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக கண்காணித்தபோது மரக்கடை மற்றும் ஆழ்வார்தோப்பு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அப்துல்முத்தலிப் (59), காஜாமைதீன் (55), அப்சலி (47), ரவி (54) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

*தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவர் திருச்சி உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை இவர் அறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போன் பறித்தவர் கைது

பெங்களூரு மாநிலம் ஷேசாத்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (34). இவர் பூ விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவு இவர் திருச்சி அண்ணாசிலை பஸ்நிறுத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்து செல்போனை திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக காட்டூரை சேர்ந்த ரமேசை போலீசார் கைது செய்தனர். கார்த்தி, மணி ஆகியோரை தேடி வருகிறார்கள்.

*திருச்சி உறையூர் பாத்திமாநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக வெக்காளியம்மன் நகரை சேர்ந்த சிவக்குமார் (21) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story