ஓடையில் மோட்டார் சைக்கிள்பாய்ந்து பிளஸ்-1 மாணவர் பலி
கழுகுமலை அருகே ஓடையில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கழுகுமலை அருகே ஓடையில் மோட்டார் சைக்கிள் பாய்ந்த போது மின்கம்பி கழுத்தில் குத்தியதால் பிளஸ்-1 மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
பிளஸ்-1 மாணவர்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 48). டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் நவீன் கார்த்திக் (17). இவர் கழுகுமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சித்திக் (19). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.
மோட்டார் சைக்கிளில் சென்றனர்
நேற்று முன்தினம் நவீன் கார்த்திக், சித்திக் ஆகியோர் தண்ணீர் கேன் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கழுகுமலைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை சித்திக் ஓட்டினார். பின்னால் நவீன் கார்த்திக் அமர்ந்திருந்தார்.
கழுகுமலை அருகே சி.ஆர். காலனியில் இருந்து பழங்கோட்டை சாலையில் பாலம் அருகே சென்றபோது, எதிரே ஒரு வாகனம் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை சித்திக் திருப்பினார். ஆனால், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அருகே இருந்த ஓடையில் பாய்ந்தது.
மின்கம்பி குத்தி சாவு
அப்போது, அங்கு கிடந்த மின்கம்பத்தின் எர்த் கம்பி நவீன் கார்த்திக் கழுத்தில் குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். சித்திக்கும் படுகாயம் அடைந்தார்.
இதை பார்த்த அந்த வழியாக ெசன்றவர்கள் கழுகுமலை போலீசுக்கும், 2 பேரின் குடும்பத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நவீன் காா்த்திக்கை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. படுகாயம் அடைந்த சித்திக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மவுன அஞ்சலி
இந்த விபத்து குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலையில் நவீன் கார்த்திக் படித்த பள்ளியில் அவரது மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.