மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து; தொழிலாளி பலி
கோத்தகிரி அருகே சாலையின் குறுக்கே பசுமாடு வந்ததால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளி பலியானார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே சாலையின் குறுக்கே பசுமாடு வந்ததால் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளி பலியானார்.
குறுக்கே வந்த பசுமாடு
கோத்தகிரி அருகே கெங்கரை சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கந்தையா என்பவரது மகன் சந்திரசேகர் (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு வேலையை முடித்து விட்டு, அதே பகுதியை சேர்ந்த நண்பரான சிவகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கீழ் கோத்தகிரியில் இருந்து தூனேரி நோக்கி சென்று உள்ளனர். மோட்டார் சைக்கிளை சிவகுமார் ஓட்டினார்.
அப்போது சாலையின் குறுக்கே திடீரென பசுமாடு ஒன்று வந்தது. இதனால் சிவகுமார் பசுமாட்டின் மீது மோதாமல் இருக்க, மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சித்து உள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் தவறி கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்து சென்ற சந்திரசேகருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிவகுமார் படுகாயம் அடைந்தார்.
போலீசார் விசாரணை
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சோலூர்மட்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்திரசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சந்திரசேகரின் சகோதரர் பழனியாண்டி சோலூர்மட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.