மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்; 10-ம் வகுப்பு மாணவர் பலி
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
10-ம் வகுப்பு மாணவர்
நாகர்கோவிலில் கீழ ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி குமார் ராஜ், தையல்காரர். இவரது மகன் ஜெர்வின் ஸ்டார் (வயது15). நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் ஜெர்வின் ஸ்டார் தனது தாயாரை பழவிளை அருகே புல்லுவிளையில் உள்ள தொழிற்சாலைக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார்.
அங்கு தாயாரை இறக்கி விட்டு ஜெர்வின் மீண்டும் வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். பருத்திவிளையில் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் சாலைைய கடக்க முயன்ற போது பருத்திவிளையில் இருந்து எறும்புகாடு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
பரிதாப சாவு
இதில் ஜெர்வின் ஸ்டார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாலையில் ஜெர்வின் ஸ்டார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வேம்பனூர் புளியடி காலனியை சேர்ந்த மணி மகன் காட்வின் (20), பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் புளியடி காலனியை சேர்ந்த வேல்முருகன் மகன் ஆகாஷ் (16) ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் இருவரும் ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.