அன்புஜோதி ஆசிரமத்தின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிள் திருட்டு
அன்புஜோதி ஆசிரமத்தின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமத்தை கேரளாவை சேர்ந்த ஜூபின்பேபி(வயது 45), இவரது மனைவி மரியா ஜூபின்(43) ஆகியோர் நடத்தி வந்தனர். ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுமை செய்யப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், சிலர் மாயமானதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூபின் பேபி உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த மார்ச் மாதம் ஆசிரமத்தை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
இந்த நிலையில் ஆசிரமத்தின் பின்பக்க கேட் பூட்டை நேற்று 25 வயதுடைய வாலிபர் ஒருவர், உடைத்து உள்ளே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடினார். அந்த மோட்டார் சைக்கிளுடன் கஞ்சனூர் கடைவீதிக்கு வந்த வாலிபர், அங்கிருந்த மெக்கானிக் கடைக்காரரிடம் இந்த வாகனத்தை இயக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இது ஆசிரமத்தின் மோட்டார் சைக்கிள்தானே?, இது உன்னிடம் எப்படி வந்தது? என்று மெக்கானிக் கேட்டார். உடனே அந்த வாலிபர், மோட்டார் சைக்கிளுடன் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இது குறித்து ஆசிரமம் நிர்வாகி ஜூபின் பேபிக்கு, மெக்கானிக் தகவல் தெரிவித்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.