போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் திருட்டு


போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் திருட்டு
x

நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த சடலகுட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் நாட்டறம் பள்ளி போலீஸ் நிலையம் அருகே உள்ள அடகுக்கடையில் அடகு வைத்துள்ள நகையை மீட்க தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

அதன் பிறகு நகையை மீட்டுக்கொண்டு வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம ஆசாமி ஒருவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்க, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி, திருடி சென்ற மோட்டார் சைக்கிளை தன்னுடைய காலால் தள்ளியபடி போலீஸ் நிலையம் பின்புறம் வழியாக செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

பட்டப் பகலில் போலீஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story