மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி தாலுகா சங்கனாப்பேரியைச் சேர்ந்த முருகன் மகன் முனீஸ்வரன் (வயது 28). இவரது மனைவி தனலட்சுமி (27). இவர்களுக்கு 1 வயதில் தனுஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முனீஸ்வரன் தனது மனைவி, குழந்தையுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டணம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளார் அருகே சென்றபோது, எதிரே அருளாட்சி என்ற திருமலாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் (42) என்பவர் டிராக்டரில் வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதிக் கொண்டது. இதில் முனீஸ்வரன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தனலட்சுமி படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான முனீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரை ஓட்டி வந்த மாரியப்பனை கைது செய்தனர்.


Next Story