மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஜவுளிக்கடை உரிமையாளர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகேயுள்ள காலன்குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் பழனிவேல் குகன் (வயது 37). இவர் சாத்தான்குளம் மெயின் பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சாத்தான்குளம் முஸ்லிம் தெருவை சேர்ந்த ஜமால் மகன் இப்ராகிம் என்பவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்தார். சாத்தான்குளம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனிவேல் குகன், படுகாயம் அடைந்தார். இ்ப்ராகிம் லேசான காயங்களுடன் தப்பினார். அக்கம் பக்கத்தினர் படுகாயங்களுடன் இருந்த பழனிவேல் குகனை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.