மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; 4 பேர் பலி
ஒட்டன்சத்திரம் அருகே, மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
பழனியில் சாமி தரிசனம்
கரூர் மாவட்டம் சீத்தம்பட்டியை சேர்ந்தவர்கள் ரத்தினம் (வயது 59), சேகர் (35). நேற்று இவா்கள் 2 பேரும், சீத்தம்பட்டியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
பின்னர் அவர்கள் சாமிதரிசனம் செய்து விட்டு பழனியில் இருந்து மோட்டார்சைக்கிளில் சீத்தம்பட்டிக்கு நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ரத்தினம் ஓட்டினார். சேகர் பின்னால் அமர்ந்திருந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (24). மில் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் துரையன் (21). பெயிண்டர். இவர்கள் 2 பேரும் நடுப்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
4 பேர் பலி
ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலையில் கேதையறும்பு அருகே கொல்லப்பட்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது இவர்களது மோட்டார்சைக்கிளும், ரத்தினம் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில், தூக்கி வீசப்பட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.