கோவில்பட்டி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்;பெயின்டர் பலி
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பெயின்டர் பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெயின்டர் பலியானார். மேலும் 3 வாலிபர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெயின்டர்
கழுகுமலை அம்பேத்கர் நகர் மாடசாமி மகன் ராஜேஷ் (வயது 24). பெயின்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கோவில்பட்டியிலிருந்து இவர், நண்பர் கலையரசன் (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே நாலாட்டின்புத்தூரில் இருந்து போர்வெல் தொழிலாளியான ஜார்கண்ட்டை சேர்ந்த மரங்சபர் மகன் சுகுசபர் (19) என்பவர் மோட்டார் சைக்கிளில் தன்னுடன் வேலை பார்க்கும் திருச்சி அய்யாகுளத்துப் பட்டியை சேர்ந்த ரெங்கசாமி மகன் மோகன் (27) என்பவருடன் கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
நேருக்கு நேர் மோதல்
சாலைப்புதூர் பெட்ரோல் பங்க் அருகில் இந்த 2 மோட்டார் ைசக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்து போனார். மேலும் கலையரசன், சுகு சபா, மோகன் ஆகிய 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அந்த 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்து குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமாவளவன் ஆறுதல்
ராஜேஷ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோருடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கழுகுமலையிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அங்கு வந்தார். அவர் ராஜேசின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், பெற்றோரிடம் ரூ.35 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் குடும்பத்தினருக்கு அரசு நிதியுதவி கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அவருடன் மாவட்ட செயலாளர் முருகன், வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், கழுகுமலை நகர செயலாளர் ராமர், கயத்தாறு ஒன்றிய செயலாளர் காளிராஜ் உள்பட பலர் வந்திருந்தனர்.