திறந்த வெளியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் பழுதாக வாய்ப்பு


திறந்த வெளியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் பழுதாக வாய்ப்பு
x

திறந்த வெளியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் பழுதாக வாய்ப்பு

தஞ்சாவூர்

தஞ்சை புதிய பஸ்நிலைய வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனங்கள் திறந்த வெளியில் நிறுத்தப்படுவதால் பழுதாக வாய்ப்பு உள்ளதால் மேற்கூரை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன காப்பகம்

தஞ்சை புதிய பஸ்நிலையம், 1995-ம் ஆண்டு தஞ்சையில் 8-வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது கட்டப்பட்டது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்செந்தூர், கன்னியாகுமரி, மதுரை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கும்பகோணம், தஞ்சை பழைய பஸ்நிலையம், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, வல்லம், சர்க்கரை ஆலை, கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கல்லூரிகள் உள்ளன.மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் உள்ளன. அதே போல் தஞ்சை புதிய பஸ் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக மாநகராட்சி சார்பில் இரண்டு அடுக்கு இருசக்கர வாகன காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் வெளியூர்களுக்கு செல்லுபவர்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். அண்டை மாவட்டங்களுக்கு வேலைக்களுக்காக செல்வோர் தங்களுடைய இருசக்கர வாகனங்களை காப்பகத்தில் நிறுத்திவிட்டு சென்று வருகின்றனர்.

திறந்த வெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள்

காப்பகத்தில் தரை, முதல் தளங்களில் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போதிய இடவசதி இல்லாததால் மீதி வாகனங்களை மாடியிலும், காப்பகத்தின் வெளியில் திறந்த வெளியிலும் நிறுத்தி விட்டு செல்கின்றனர். பொதுமக்கள் காலையில் நிறுத்திய வாகனங்களை மாலையில் தான் திரும்ப எடுத்து செல்கின்றனர். மேற் கூரை இல்லாததால் அந்த வாகனங்கள் பகல் முழுவதும் திறந்த வெளியில் நிற்கிறது. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் வாகனங்கள் பழுதாக வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாள் முழுவதும் மோட்டார் சைக்கிள்கள் வெயிலில் நிறுத்தப்படுவதால் வாகனத்தின் நிறங்கள் மாறுகிறது. என்ஜின் ஆயில் இருகி என்ஜின் பழுதாக வாய்ப்பு உள்ளது. மழையில் வாகனங்கள் நனைவதால் என்ஜினில் தண்ணீர் இறங்குவதால் வாகனங்களை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. மேலும் வாகன உதிரி பாகங்கள் துருப்பிடித்து விடுகிறது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய பஸ் நிலைய வாகனகாப்பகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளர்.


Next Story