சடுகுடு ரோட்டில் திணறும் வாகன ஓட்டிகள்
குண்டும், குழியுமாக இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் மிகவும் திணறி வருகின்றனர்.
திருப்பூர்,
திருப்பூர் வளம் பாலம் அருகே உள்ள ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் மிகவும் திணறி வருகின்றனர்.
குண்டு, குழி ரோடு
திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் இருந்து மின் மயானம், வளம் பாலம் செல்லும் வழியில் ரோடு மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு ரோட்டில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதேபோல் ரோட்டின் பெரும் பகுதியில் ஜல்லி கற்கள் பரவி கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் இங்கு சடுகுடு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சற்று நிலை தடுமாறினாலும் கீழே விழும் நிலை உள்ளது. இதேபோல் ரோட்டில் அதிக அளவில் புழுதி பறந்தவண்ணம் இருப்பதால் வாகன ஓட்டிகள் புழுதிக்கு நடுவே மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.
விரைவில் சீராகுமா?
இது ஒருபுறமிருக்க, தற்போது யூனியன் மில் ரோடு ரவுண்டானா அருகே புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருவதால் ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் நொய்யல் ஆற்று பாலம் அடிக்கடி அடைத்து வைக்கப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் தற்போது வளம் பாலம் வழியாக செல்வதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் வளம் பாலம் அருகே சேதமடைந்து காணப்படும் ரோடு வழியாக அதிக வாகனப்போக்குவரத்து இருப்பதால் ரோடு மேலும் சேதமடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளின் சிரமமும் அதிகரித்து வருகிறது. எனவே இப்பகுதியில் ரோடை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.